Saturday, December 24, 2011

கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்


உலகெங்கும் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்துமஸ். மனிதர்களை ரட்சிப்பதற்காகத் தேவமைந்தன் ஒரு சுடராக தொழுவத்தில் தோன்றிய நாள். உலகெங்கிலும் இதில் வித்தியாசமே இல்லை. 

ஆனால் கலாசாரத்துக்குக் கலாசாரம், நாட்டுக்கு நாடு கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறுசிறு வித்தியாசங்களுடன் கொண்டாடுகிறார்கள். 
ஆனால் அடிப்படை உணர்வு ஒன்றுதான். 

 உலகெங்கும் வீடுகளிலும், தேவாலயங்களிலும் “நட்சத்திரங்களும்”, விளக்குகளும் பூத்து ஜொலிக்கும். கிறிஸ்துமஸ் மரங்களில் மினுக்கும் விளக்குகள் காய்த்துச் சிரிக்கும். தேவ புதல்வனை வரவேற்கும் பாடல்கள் ஒலிக்கும். இனிமை பூத்துக் கிடக்கும் இந்தக் குளிர்கால வேளையில் எங்கெங்கும் ஓர் உற்சாகம் மிதக்கும். உச்சக்கட்ட கொண்டாட்டம், கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தின மாலையில்தான். அப்போது மக்கள் புத்தாடை அணிந்து பிரார்த்தனை செய்கிறார்கள். இயேசுவைப் போற்றிப் பாடுகிறார்கள். ஆடுகிறார்கள். வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று “கேக்” போன்ற இனிப்புகளுடன் விருந்தும், பரிசுப் பொருட்கள் பரிமாறலுமாக உள்ளங்கள் பூரித்துப் பொலிவு பெறுகின்றன. நூற்றாண்டுகளாக இந்தக் கொண்டாட்டம், இந்த உற்சாகம் தொடர்ந்து வருகிறது. கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு மதத்தினரும் கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பேரார்வத்துடன் கொண்டாடி வருகிறார்கள். 

இந்த இனிய நாளில் எங்கும் மகிழ்ச்சியும், சிரிப்பும் பொங்கிப் பெருகுகிறது. சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது. அப்படி ஒரு மருந்து இருப்பதை நாம் மறந்துவிடுகிறோம். அவ்வளவுதான்.

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும். அழுங்கள்....நீங்கள் ஒருவரே அழுதுக்கொண்டிருப்பீர்கள்...ஸ்டீவன்சன். 

சிரிப்பே உலகின் மிகச்சிறந்த மருந்து என்று சொன்னால் அது மிகையல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும், நோய்களுக்கும் இடையேயான தொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த ஆராய்ச்சியின் பலனாக ஒரு உண்மையைக் கண்டறிந்தனர். நமது எண்ணங்களுக்கும் மன அலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 

 இதனை திருவள்ளுவர் இன்னும் ஒருபடி மேலே போய் இப்படி சொல்கிறார்.

 இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண 
நன்னயம் செய்து விடல்.


நமக்கு துன்பம் செய்தவர்களை கூட, அவர்கள் வெட்கப்படும் படி நன்மை செய்வதாகும் என்கிறார். பின்னர் அவர்கள் நமக்கு செய்த தீமைகளையும், நாம் அவர்களுக்கு செய்த நன்மைகளையும் மறந்துவிட வேண்டும் என்கிறார்.

ஆம், நமது மனதினை சுத்தப்படுத்தி, மனதினை மிகவும் விசாலமாக்கும் விழாக்காலம் இது. வரும் புத்தாண்டு அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், பல்வேறு வெற்றிகளையும் வாரி வழங்கட்டும். 

இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.