Sunday, January 15, 2012

தானே..தானே..வந்தானே..


 கோரத்தாண்டவம் ஆட...

  வழக்கம் போலத்தான் இந்த வானிலை அறிக்கையும் பொய்யாகப்போகும் என்றுதான் அனைவரும் நேற்று (29.12.2011) இரவு வரை நம்பிக்கொண்டு இருந்தனர்.

    ஒரு வாரமா, ரமணன் சும்மா..சும்மா “ தானே..தானே..ங்கிறார். புயல் வருகிற மாதிரி கொஞ்சம் கூட அறிகுறியே இல்ல. வெளியில பாருங்க சார், வானம் எவ்வளவு தெளிவா இருக்கு..இப்படித்தான் தொலைகாட்சி பார்த்தவர்கள் அத்தனை பேரும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆனால் ரமணன் சளைக்கவேயில்லை. தெளிவாக புயல் பற்றி, அதன் முன்னேற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருந்தார். நாகப்பட்டினத்திற்கும், சென்னைக்கும் இடையே 30௦-ம் தேதி காலை கரையை கடக்கும். மழையும், காற்றின் வேகமும் மிக அதிகமாக இருக்கும் என்று சொன்னார். கடலூரில் இதுவர இல்லாத அளவிற்கு மிகவும் உச்ச கட்ட போல் எச்சரிக்கை கூண்டு 10-ம் எண் ஏற்றப்பட்டது.
தொலைகாட்சி நிருபர்கள் ஒவ்வொரு இடமாக சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி பொது மக்களிடம் கேட்டு செய்திகள் தந்து கொண்டிருந்தனர். இதனைப் பார்த்த பிறகுதான் மாவட்ட நிர்வாகம் விழித்துக்கொண்டு ஏற்பாடுகளை வியாழன் மாலை முடுக்கி விட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்தது.

    நெய்வேலியில் (எங்கள் ஊர்) இதற்கென எந்த சவாலையும் எதிர் கொள்ள நகர நிர்வாகம் ஒரு அவசர கால கட்டுப்பாட்டு அறையை ஏற்பாடு செய்தது. ௩௦௦-ம் தேதி வெள்ளிகிழமை காலை நான்கு மணி முதல் காற்றின் வேகம் அதிகரித்தது. அச்சுறுத்தும் வகையில் காற்றின் வேகமும், சத்தமும் இருந்தது. 04.30௦ மணிக்கு முன்னெச்சரிக்கையாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக இல்லாதது, மின்சாரத்தை நிறுத்தி வைப்பது. எந்த தொலைபேசியும் இயங்கவில்லை, ஒன்றே ஒன்றைத்தவிர, BSNL தரை வழிச்சேவைக்கு நன்றி. அதனால்தான் செய்திகளை பிற இடங்களிலிருந்து தெரிந்து கொள்ளவும், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் முடிந்தது.

    காலை எட்டு மணிக்கு 10 நிமிட இடைவேளை. அப்பொழுது சில படங்கள் எடுக்க முடிந்தது. அதன் பின்னர் மீண்டும் காற்று சுழற்றி சுழற்றி அடிக்க ஆரம்பித்தது. இம்முறை மழையும் சேர்ந்து கொண்டது. ஏற்கனவே பாதி மரங்கள், கிளைகள் முரிந்த நிலையில் இருந்தது. இம்முறை மரங்கள் காற்றின் வேகத்தை தாக்கு பிடிக்க முடியாமல் வேரோடு பெயர்ந்தும், முறிந்தும் விழ ஆரம்பித்துவிட்டன. மின்கம்பங்களும் சில இடங்களில் சரிந்து விழுந்தன.

     காலை 11- மணிக்கு எல்லாம் முடிந்து விட்டது. எங்கு பார்த்தாலும் தரையில் விழுந்த மரங்கள். சாலைகளில் அனைத்திலும் மரங்கள். மனித நடமாட்டம் முற்றிலும் இல்லை.

    நிலைமை சீராக பல நாட்கள் பிடிக்கும். சாலைகள் சரியாக வேண்டும். மின் இணைப்புகள் சரிபார்க்கப்பட வேண்டும்.
இயல்பு வாழ்க்கையை நெய்வேலியில் பார்ப்பது எப்போது. இழந்த பசுமையை கொண்டு வர பல ஆண்டுகள் ஆகலாம். 
   
கடலூர்- புதுவை இடையே கரையைக் கடந்தது புயல்-140 கி.மீ வேகத்தில் கடும் சூறைக்காற்றுடன் கன மழை.
படங்களைப் பார்த்தாலே உங்களுக்குப் புரியும்.