உலகத் தாய்ப்பால் வாரம்
குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் ஊட்டுவது தொன்றுதொட்டு நடைமுறையில் இருந்துவரும் வழக்கம். குழந்தை பிறந்தவுடன் இயற்கை
அமுதமாகப் பால் சுரக்க ஆரம்பிக்கிறது.
இது ஒரு இயற்கை நிகழ்வு. அதை முறைப்படி தொடர வேண்டும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதால் சமூகத்தில், நாட்டில், உலக அளவில் நீடித்த வளர்ச்சியை எட்டுவது சாத்தியமா? உலகத் தாய்ப்பால்
வாரத்தை ஒட்டிய இந்த ஆண்டின் மையக் கருத்து தாய்ப்பால்
வழங்கினால் நீடித்த வளர்ச்சி நிச்சயம்
சாத்தியம் என்கிறது. அதேநேரம் தாய்ப்பால் கொடுக்கத் தவறுவதால், நீடித்த வளர்ச்சி
தவறிப்போகும் என்பதை மறந்துவிடக் கூடாது.
தாய்ப்பால் அளிப்பதால்
கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்காதவை. தாய்ப்பால் கொடுப்பதால்
தாய்க்கும் குழந்தைக்கும் நோய்கள் குறைந்து, சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது
என்பதற்கான புள்ளிவிவரங்களுடன் கூடிய சான்றுகளைப் புகழ்பெற்ற
மருத்துவ ஆய்விதழான லான்செட் இந்த ஆண்டு பதிவு செய்திருக்கிறது.
- பெரும் செலவு குறையும்
- நோய் நெருங்காது
- உணர்வுக்கு உணவு
- இயற்கை பாதுகாப்பு
- தரமான கல்வி
பெரும் செலவு குறையும்
குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்குத் தாய் பாலூட்டி,
பிறகு வீட்டில் தயாரிக்கப்பட்ட இணை உணவுகளை ஊட்ட
வேண்டும். தாய்ப்பால் கொடுக்கப்படாத நிலையில், மாவுப்பால் அல்லது
மாட்டுப்பால் வாங்குவதற்கு, எரிபொருளுக்கு என்று பல்வேறு
செலவுகள் நீளும். தாய்ப்பாலைத் தவிர்ப்பதால் தாய்க்கும் குழந்தைக்கும்
ஏற்படும் நோய்களுக்கான சிகிச்சைக்கான செலவோ, எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது போல் செலவைக் கடுமையாக
அதிகரிக்கும்.
அதேநேரம் தாய்ப்பால் அளிக்கும் தாய்க்குச் சுமார் 350
கலோரியும் 15 கிராம் புரதமும் தினமும்
அதிகப்படியாகத் தரப்பட வேண்டும். ஒரு கிண்ணம் சாதம், ஒரு முட்டை, இரண்டு டம்ளர் பால், ஒரு கரண்டி சமைத்த
பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றின்மூலம் தாய்க்குத் தேவையான
ஊட்டச்சத்தை இந்தக் காலத்தில் வழங்க முடியும். இதன்
பயன் பல காலத்துக்கு நீடிக்கும்.
நோய் நெருங்காது
ஆறு மாதக் காலம்வரை குழந்தைக்குத் தேவையான அனைத்து
ஊட்டச்சத்துகளும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்புகள்,
வைட்டமின்கள், தாது உப்புகள், நுண்ணூட்டச் சத்துகளான இரும்பு, தாமிரம், துத்தநாகம்,
அயோடின், செலினியம், மக்னீசியம், மாங்கனீசு போன்றவை தாய்ப்பாலால் கிடைக்கின்றன. இதனால் ஊட்டச்சத்துக் குறைபாடு சார்ந்த நோய்கள், குழந்தையை
நெருங்குவதில்லை. பிறந்த முதல் ஆறு மாதங்களுக்குத்
தாய்ப்பால் மட்டும் தந்து, பிறகு வீட்டில் தயாரிக்கப்படும்
பாரம்பரிய உணவைத் தருவதால், குழந்தைக்குப் பசி தீருவதுடன் தேவையான பலவித
ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன.
உணர்வுக்கு உணவு
தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகம். இதனால் எண்ணற்ற தொற்றுநோய்களிலிருந்து குழந்தை பாதுகாக்கப்படுகிறது.
ஊட்டச்சத்துக் குறைபாட்டு நோய்களும் தாக்காது.
அது மட்டுமல்லாமல் குழந்தையைத் தாய் தன் மார்போடு அணைத்து,
தலையை வருடிக் கண்ணோடு கண் பார்த்துப் பேசி, பாடிப்
பாலூட்டும்போது, குழந்தையின் உணர்வுகளுக்கு
மிகச் சிறந்த ஊக்கம் கிடைக்கிறது. இந்த அன்பும் அரவணைப்பும் குழந்தைக்குச்
செம்மையான பாதுகாப்பு உணர்வை அளிக்கின்றன. இதை 'உணர்வுகளுக்கு
உணவு அளித்தல்' என்கிறார்கள். இந்தத் தாய் - சேய் பாசப் பிணைப்பு, குழந்தையின் மனம் மற்றும் மூளை வளர்ச்சிக்குச் சிறந்த அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கிறது.
இயற்கை பாதுகாப்பு
கருவுற்ற காலத்தில் தாயின் உடலில் சேர்ந்திருக்கும் சுமார் 3
கிலோ கொழுப்புச்சத்து, தாய்ப்பால் ஊட்டுவதால் கரைந்துவிடுகிறது.
தாய்மைப் பேற்றுக்கு முன் இருந்த உடல் அமைப்பை, தாய்
பெற்றுவிடுகிறாள். பாலூட்டிய பெண்களுக்கு
மார்பகப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. நீரிழிவு நோய்
உள்ள பெண்களுக்கும், தாய்ப்பால் ஊட்டும் காலங்களில் நோய் எளிதில்
கட்டுப்படுகிறது.
அதேபோல முதல் ஆறு மாதக் காலம் தாய்ப்பால் மட்டும் தரும்போது,
தாய் மறுபடி கர்ப்பம் தரிப்பதும் தடுக்கப்படுகிறது.
எனவே, தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும்
தாய்க்கும் உடல்நலமும் மனநலமும் நன்கு பேணப்படுகின்றன.
தரமான கல்வி
தாயின் பாலில் DHA, Epidermal Growth Factors,
Tawrine, Cystine போன்ற பல வகை ஆக்கபூர்வ
வேதிப்பொருட்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் குழந்தையின் மூளைவளர்ச்சிக்கும்
திறன் மேம்பாட்டுக்கும் உதவுகின்றன. இவை குழந்தையின் அறிவு வளர்ச்சியை
(IQ) அதிகப்படுத்துகின்றன.
நோயற்ற உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடுகளும் இல்லாமல், நல்ல
அறிவு வளர்ச்சியுடன் இருக்கும் குழந்தை நல்ல கல்வி கற்பது
எளிதில் சாத்தியமாகும். இப்படியாக உடல்நலம் முதல் அறிவுநலம் வரை அனைத்தும்
மேம்படத் தாய்ப்பால் அடிப்படைக் காரணமாக அமைகிறது.
-நன்றி: தி இந்து.
மேலும் தகவலுக்கு: Breastfeeding Promotion Network of India (BPNI)
-நன்றி: தி இந்து.
மேலும் தகவலுக்கு: Breastfeeding Promotion Network of India (BPNI)
No comments:
Post a Comment